Monday, October 6, 2014

லில்லி தாமஸ் யார்? செல்வி.ஜெயலலிதா தமிழக முதல்வர் பதவி இழக்க என்ன செய்தார்?

லில்லி தாமஸ்

‘லில்லி தாமஸ்' மற்றும் ‘லில்லி தாமஸ் வழக்கு’ போன்ற சொற்கள் தற்சமயம் செய்தித் தாள்கள் மற்றும் டி.வி சேனல்களில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் பின்னணி என்ன? யார் இந்த லில்லி தாமஸ்?  கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த லில்லி தாமஸ் ஒரு உச்சநீதிமன்ற வழக்கறிஞர். பரபரப்பான பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா இழந்துள்ளார் என்றால் அதற்கு இந்த லில்லி தாமஸ் (எஸ்.என்.சுக்லாவுடன் இணந்து) உச்சநீதிமன்றத்‌தில் தொடுத்த பொதுநல வழக்கினை விசாரித்து 10.7.2013 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பே காரணம். அது என்ன வழக்கு? இத்தீர்ப்பில் அப்படி என்ன வரலாற்றுச் சிறப்பு இருக்கிறது? அரசியல் வாதிகளை, குறிப்பாக நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களை கிலியடைய வைத்துள்ளதென்றால் அது வரலாற்றுச் சிறப்பு மிக்கது தானே. ஆமாம். குற்ற வழக்குகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8 (1), 8 (2), மற்றும் 8 (3) படி உறுப்பினர் தகுதியை உடனடியாக இழப்பது பற்றிய தீர்ப்பு என்றால் கிலியடையத்தானே வேண்டும்.

குழப்பமாய் இருக்கிறதா? சற்று பொறுமையாகப் படித்தால் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இந்தியபாராளுமன்றதால் இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின்  சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவது பற்றியும், இவ்வமைப்புகளில் உறுப்பினர்களின் தகுதி மற்றும் தகுதியின்மை பற்றியும்,  தேர்தலில் தொடர்புடைய லஞ்சம் மற்ற குற்றங்கள் அது தொடர்பான பிணக்குகள், ஊர்ஜிதமான சந்தேகங்கள் பற்றியும் சட்ட வரையறையை வகுத்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவில் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களில் யாரேனும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால், அவர்கள் உறுப்பினர் தகுதியை இழப்பது பற்றிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டப் பிரிவுகளின்படி, 1. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், 2. கடன் பிரச்சினையால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டவர்கள், 3. தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்கள், 4. வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள், 5. தீவிரவாத செயல்களில் தொடர்பு, 6. பலாத்காரம் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றம், 7. மக்களிடையே மத வேற்றுமையை தூண்டி கலவரம் ஏற்படுத்துவது, 8. போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், 9. தேர்தலின்போது வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல், 10. வாக்குச் சீட்டுகளை அள்ளிச் செல்லுதல் போன்ற குற்றங்கள் மற்றும் 11. ஊழல், 12. முறைகேடு போன்ற குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினராக பதவியில் தொடர முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8-ல் அடங்கியுள்ள (1), (2), (3) ஆகிய உட்பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.

மேலே சொல்லப்பட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள், கீழ் நீதிமன்றங்களால் தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதோடு, தண்டனை முடிந்த பிறகும் அடுத்த 6 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது என இந்த பிரிவுகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சரி அப்படியென்றால் இந்த தீர்ப்பு உச்சமன்றத்தால் பிரகடனப்படுத்துவதற்கு முன்பு, அதாவது 10.7.2013 க்கு முன்புவரை யாரும் பதவி இழந்ததாகத் தெரியவில்லையே ஏன்?

காரணம் இச்சட்டத்தின் 8-வது பிரிவின் (4)-வது உட்பிரிவு ஆகும். விசாரணை (கீழ்) நீதிமன்றத்தால் தண்டனை பெற்றாலும் கூட உடனடியாகப் பதவி இழக்காதபடி நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு 10 ஜூலை 2013 தேதிவரை பாதுகாப்பு அளித்து வந்துள்ளது. விசாரணை (கீழ்) நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து மேல் நீதிமன்றங்களில் முறையீடு செய்யும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை இழக்க மாட்டார்கள் என்ற பாதுகாப்பு தான் இது. இச்சட்ட உட்பிரிவு தந்த பாதுகாப்பால் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தங்கள் பதவிகளை அனுபவித்து வந்தனர்.

இந்த சட்ட உட்பிரிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது எனவும் 8 (1), 8 (2), மற்றும் 8 (3) உட்பிரிவுகளுடன் முரண்பாடுகள் கொண்டது என்றும் சட்டப்பிரிவு 8 (4) பிரிவு செல்லாது என அறிவிக்கக் கோரி கடந்த 2005-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் லில்லி தாமஸ், எஸ்.என்.சுக்லா என்ற 2 பேர் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர்.

மனுக்களை முறையாக விசாரித்த பின் உச்ச நீதிமன்றம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை 10.7.2013 அன்று பிரகடனப்படுத்தியது.மனுதாரர்களின் கோரிக்கை நியாயமானது என்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8 (4)-வது பிரிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது என்றும், அந்த சட்டப்பிரிவு செல்லாது என்றும் பிரகடனம் செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பால் நாட்டில் ஐந்து பேர் இது வரை தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். இவர்களில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி உட்பட ஐந்து பேர் தங்கள் பதவிகளை இழந்தனர்.  தற்போது ஆறாவதாக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா இழந்துள்ளார்.

திருமணமாகாத லில்லி தாமஸூக்கு தற்போது 87 வயதாகிறது. பள்ளிப்படிப்பு திருவனந்தபுரம்; சட்டப்படிப்பு சென்னை சட்டக்கல்லூரி; சென்னைப் பல்கலைக்கழகம்; புதுடில்லி நகரில் வசித்து வந்துள்ளார்; 1964 ஆம் ஆண்டு முதல் பல பொதுநல வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானவுடன் தமிழக மக்கள் தங்கள் கோபத்தை லில்லி தாமஸ் மேல் காட்டிவிடுவார்களோ என்று பயந்து தலைமறைவாக இருந்து வருகிறார். “பதவியில் இருந்த போது ஜெயலலிதா எவ்வளவு பவர்ஃபுல்லாக இருந்தார்? ஆனால் இப்போது? எங்கே போனார்கள் அவர்கள் கட்சித் தொண்டர்கள் எல்லாம்? எதுவும் செய்ய முடிந்ததா? அவரது சொத்துகளை எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டாமா? நமது சட்டம் இன்னமும் தெளிவாக இருக்க வேண்டும்” என்று இன்னமும் வாதிடுகிறார் லில்லி தாமஸ். அதனால் தானோ என்னவோ இந்த தலைமறைவு வாழ்க்கை இவருக்கு.
India News: Lily Thomas speaks on the decision of the Supreme Court (Youtube)

No comments: