Catchy Advertisements |
Catchy Advertisements |
பிக் பில்லியன் டே!!! அப்படின்னா என்ன?
அது என்ன பிக் பில்லியன் டே?? ஃபிளிப்கார்ட்டின் வாடிக்கையாளர்களை கவரும் திட்டம் தான் பிக் பில்லியன் டே.
‘பிக் பில்லியன் டே' என்ற ஃபிளிப்கார்ட்டின் தள்ளுபடி விற்பனை திட்டம் 06 அக்டோபர் 2014 திங்கள்கிழமை அன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 50 சதவீதம் வரை தள்ளுபடியில் பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கலாம் என ஃபிளிப்கார்ட் அறிவித்திருந்தது, சில பொருட்களை ஒரு ரூபாய்க்கு வாங்கலாம் என்பதும் கவர்ச்சியான ஒரு அறிவிப்பு எனலாம்.
அமேசான் நிறுவனத்தின் 2 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தை சமாளிக்கவும், அலிபாபா நிறுவனத்தின் இந்திய சந்தை முயற்சிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது தான் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டே தள்ளுபடி விற்பனை திட்டம்.
சென்ற ஒரு வார காலத்துக்கும் மேலாக ஃபிளிப்கார்ட் இது பற்றி பரபரப்பாக விளம்பரம் செய்து வந்தது. ஃபிளிப்கார்ட் நிறுவனர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இ-மெயில் மூலமும் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்தார்கள்.
ஃபிளிப்கார்ட் எதிர்பார்த்த அளவுக்கு ஆன்லைன் வர்த்தகம் சூடு பிடித்ததா?
அது தான் இல்லை! விளம்பரங்களைப் பார்த்து வாடிக்கையாளர்கள் இணையதளத்தை ஒரே நேரத்தில் முற்றுகைப்படுத்தவே இணையதளம் முடங்கியதாம். சரி இணையதள இணைப்புக் கிடைத்தவர்களாவது தள்ளுபடி விலையில் பொருட்களை ஆன்லைனில் வாங்கினார்களா? இல்லவே இல்லையாம். மிகுந்த ஏமாற்றமாம். இவர்கள் விரும்பிய பொருட்களும் விற்றுவிட்டபடியால் ஸ்டாக் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். இவர்களுக்கும் மிகுந்த எரிச்சல். எனவே தங்கள் ஆதங்கத்தை பல சமூக வலைதளங்களில் பதிவு செய்துவிட்டனராம்.
யார் இந்த ஃபிளிப்கார்ட்?
ஃபிளிப்கார்ட் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனம் மற்றும் இணையதளம். ஃபிளிப்கார்ட் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் என்ற இரு ஐ.ஐ.டி பட்டதாரிகளால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாலு லட்ச ரூபாய் முதலீட்டில் ஃபிளிப்கார்ட்டை தொடங்குவதற்கு முன்பு இவர்கள் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்தார்கள். தகுந்த திட்டமும் உழைப்பும் மட்டுமிருந்தால் எந்த வணிகத்தையும் திறம்படச் செய்யலாம் என்பதற்கு இவர்கள் நல்ல எடுத்துக்காட்டு என்கிறார்கள். தொடக்கத்தில் 18 மாதங்களுக்கு இவர்கள் எந்தவித சம்பளமும் பெறாமல் உழைத்தார்களாம். வென்சர் கேபிடல் என்ற நிறுவனம் கூட இவர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு ஆயத்தமாய் இருந்ததாம்.
ஆன்லைன் வணிகத்தில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை நம்பியே தங்கள் விற்பனையை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு இந்த நடைமுறை முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளது. எனவே ஃபிளிப்கார்ட் கேஷ் ஆன் டெலிவரி திட்டத்தை 2010-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். மிகவும் ரிஸ்க்கான இத்திட்டம் துணிச்சலாக அறிமுகப்படுத்தப்பட்டு மிகப் பெரிய வெற்றியைக் குவித்தது என்று தெரிகிறது.
வென்சர் கேபிட்டல், அக்செல், டைகர் குளோபல், நாஸ்பர், மார்கன் ஸ்டேன்லி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிளிப்கார்டில் முதலீடு செய்திருக்கின்றனவாம். கடந்த ஏழு வருடங்களில் 176 கோடி டாலர் அளவுக்கு ஃபிளிப்கார்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உலகளவில் அதிகளவு முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனம் பிளிப்கார்ட்தான் என்கிறார்கள். இப்போது ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும் என்று விளம்பரப்படுத்திப் பொருள்களை விற்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நடைமுறையில் அதிக அளவில் தள்ளுபடி கொடுக்க முடிகிறது என்கிறார்கள்.
Reference
ஃபிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனை: இணையதளத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் தி இந்து October 7, 2014
No comments:
Post a Comment