மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்
சென்னை பூக்கடை
திருப்பத்தில், தலையில் கிரீடத்தோடும், கையில் செங்கோலோடும் ஆளுயர நின்று
கொண்டிருக்கும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் சிலையைப் பார்க்கும்போதெல்லாம் இந்தியா அடிமைப்பட்டுக்
கிடந்ததை நினைவுபடுத்தும் இந்த சிலையை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று
தோன்றும். இதுகுறித்து ஆராய்ந்தபோது நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தன.
பூக்கடை பகுதியில் சிலையாக.. |
கிழக்கிந்திய
கம்பெனியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, அடிமை இந்தியாவின் முதல்
பேரரசியான இங்கிலாந்து ராணியின் பேரன்தான் ஐந்தாம் ஜார்ஜ். இவரது தந்தையான ஏழாம்
எட்வர்ட் 1910இல் பரலோகம் போய்ச் சேர்ந்ததும், இங்கிலாந்தின் மன்னரானார் ஜந்தாம்
ஜார்ஜ். அப்போது இந்தியாவும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால், தனது பதவி
ஏற்பு விழாவை இந்தியாவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜார்ஜ் விரும்பினார். காரணம்,
அவருக்கு இந்தியாவின் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருந்தது.
ஜார்ஜ், இளவரசனாக
இருந்தபோதே இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இளவரசர் ஜார்ஜ் 1909ஆம் ஆண்டில் மெட்ராஸ் வந்தபோது, அவரது வருகையை
கொண்டாடும் விதமாக ஒரு பிரம்மாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்
ஒலியுடன் கூடிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதற்காக 'க்ரோன்-மெகாபோன்' என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இது கிராமபோன்
பொருத்தப்பட்ட படப் புரொஜக்டர். திரையில் படம் ஓடும்போது, அதற்கேற்ப ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலி கிராமபோனில்
ஒலிக்கும். இப்படித்தான் மெட்ராஸ்வாசிகளுக்கு ஜார்ஜின் புண்ணியத்தில் முதல் ஒலி,
ஒளி சினிமாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் வருகை தந்ததன்
நினைவாகத்தான் இன்றைய பூக்கடை பகுதி ஜார்ஜ் டவுன் எனப் பெயர் மாற்றப்பட்டது.
ஐந்தாம் ஜார்ஜ்,
வேல்ஸ் இளவரசராக சென்னைக்கு வந்திருந்த போது, பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவைப்
பார்க்க விரும்பினாராம். இதனையடுத்து அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் கேரளாவில் இருந்த
ரவிவர்மாவை சென்னை வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த சமயத்தில், ரவிவர்மாவின் மகன்
ராமவர்மா பெரியம்மை வந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் அரசின்
அழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து ரவிவர்மா சென்னைக்கு வந்தார். மெட்ராஸ் கவர்னரையும்,
இளவரசரையும் தனக்கே உரிய பாணியில் தத்ரூபமாக வரைந்து கொடுத்தார்.
இரண்டு ஆண்டுகள்
கழித்து 1911இல் ஐந்தாம் ஜார்ஜ், லண்டன் அரண்மனையில் மன்னராக பதவி ஏற்றுக்
கொண்டார். பின்னர் அவரது விருப்பப்படியே இந்தியாவிலும் ஒரு பதவி ஏற்பு விழாவிற்கு
ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக 40 நாள் பயணமாக மன்னரும், ராணியாரும்
இந்தியா வந்தனர். இந்த விழாவில்தான் இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவில் இருந்து
புதுடெல்லிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய இளவரசர்கள், மாகாண
கவர்னர்கள் எனப் பல பெருந்தலைகள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி, 1911ஆம் ஆண்டு டிசம்பர்
12ந் தேதி வெகு தடபுடலாக நடைபெற்றது.
விழாவிற்கு வந்த இந்திய இளவரசர்கள் |
மன்னரின் இந்த
முடிசூட்டு விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. ராஜவிசுவாசத்தை காட்டும்
வகையில், மெட்ராஸ் மாகாணத்தில் இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முத்தையால்பேட்டை சபா, மன்னரைப் போற்றிப் பாடும்
பாட்டுப் போட்டி ஒன்றை அறிவித்தது. இதற்கு பல இடங்களில் இருந்தும் பாடல்கள் வந்து
குவிந்தன. இறுதியில் ராமநாதபுரம் 'பூச்சி' ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவர் தோடி
ராகத்தில் எழுதிய பாடல் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.
இப்படி எல்லாம்
கோலாகலமாக முடிசூட்டிக் கொண்டு லண்டன் திரும்பிய மன்னர் ஐந்தாம் ஜார்ஜிற்கு, அந்த
மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை. 1914இல் முதல் உலக யுத்தம் ஆரம்பித்து
மன்னரின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. நான்கு ஆண்டுகள் நீடித்த யுத்தத்தில்
இறுதியில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும் இதனால் ஏற்பட்ட உடல் சோர்வும், மன
உளைச்சலும் மன்னர் ஜார்ஜை வாட்டி எடுத்தன.
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் |
1915இல் பிரான்சில்
படைப்பிரிவுகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, மன்னர் ஜார்ஜ் அமர்ந்திருந்த
குதிரை திடீரென அவரை கீழே தள்ளியது. அப்போது விழுந்தவர்தான், பின்னர் அவர்
முழுமையாக குணமடைந்து எழவே இல்லை. அவருக்கு புகைப்பழக்கமும் இருந்ததால் சுவாசப்
பிரச்னையால் அவதிப்பட்டார். 1918இல் உலகப் போர் முடிந்தாலும், நோயுடனான மன்னரின்
போராட்டம் முடியவில்லை.
நுரையீரல் சவ்வு
அழற்சியும் ஜார்ஜை வாட்டி எடுத்தது. இதுபோதாதென்று ரத்தமே நஞ்சாக மாறும் septicaemia என்ற நோயும் அவருக்கு இருந்தது. இவ்வளவு
நோய்கள் இருந்தாலும் அவர் மன்னர் என்பதால் பெரும் பொருட்செலவில் 20 ஆண்டுகளுக்கும்
மேலாக அவரின் உயிரை மருத்துவர்கள் இழுத்துப் பிடித்தனர். ஆனால் எதற்கும் ஒரு
முடிவு இருக்கிறது அல்லவா. அந்த முடிவு 1936, ஜனவரி 20 அன்று வந்தது. மன்னர் இறந்துவிட்டார்
என இரவு 11.55 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மன்னரின் மரணம்
குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவின் தலைவர் டாசன் தமது
டைரியில் எழுதி வைத்திருந்தார். அந்த டைரிக் குறிப்பு 1986இல் வெளியாகி பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், மன்னரின் இறப்பு செய்தி, காலைப் பத்திரிகைகளில்
வரவேண்டும் என்பதற்காகவும், முக்கியத்துவம் குறைந்த மாலைப் பத்திரிகைகளில்
அச்செய்தி முதலில் வெளியானால் மன்னர் குடும்பத்திற்கு மரியாதையாக இருக்காது
என்பதாலும், மன்னரின் மரணத்தை இரவுக்குள் வேகப்படுத்த தாம் சில ஊசிகளைப் போட்டதாக
டாசன் அதில் தெரிவித்திருந்ததார்.
இப்படி இருபதாண்டுகளுக்கும்
மேலாக நோய்வாய்ப்பட்டு இறுதியிலும் சர்ச்சைகளை விதைத்துவிட்டு உயிரை விட்ட
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்தான்
இன்றும் பூக்கடை பகுதியில் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். செங்கோலுடன் நெஞ்சு
நிமிர்த்தி நிற்கும் ஜார்ஜைப் பார்க்கும்போதெல்லாம், வாழ்வின் மாயக் கைகள் சூரியன்
அஸ்தமிக்காத இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் அரசனையும் விட்டுவைக்கவில்லை என்ற
யதார்த்தம் முகத்தில் அறைகிறது.
நன்றி - தினத்தந்தி
* துறைமுகம் பகுதியில்
இருந்த மன்னர் ஜார்ஜின் சிலை, பின்னாட்களில் அகற்றப்பட்டு விட்டது. பனகல்
பார்க்கில் இருந்த ஜார்ஜின் மார்பளவு சிலை திடீரென காணாமல் போய்விட்டது. ஜார்ஜின்
தகப்பனாரான ஏழாம் எட்வர்டிற்கும் அண்ணா சாலையில் ஒரு சிலை இருந்தது. ஆனால் அது
ஒருநாள் திடீரென அகற்றப்பட்டு அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.
* வேட்டைப் பிரியரான
மன்னர் ஜார்ஜ், இந்தியா வந்திருந்த போது அருகில் உள்ள நேபாளக் காடுகளில்
வேட்டையாடினார். அப்போது 10 நாட்களில் அவர் 21 புலிகள், 8 காண்டாமிருகங்கள்
மற்றும் ஒரு கரடி ஆகியவற்றைக் கொன்றதாக ஒரு குறிப்பு உள்ளது.